பொறியியல் மாணவர்களின் நிலை கேள்விக்குரியதா?
வரும் மே மாதத்தில் தமிழகத்தில் உள்ள 550க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து முடித்து வெளியேற இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் வேலை உறுதியாக காத்திருக்கிறதா என்பது கேள்விக்குரியதே. இதில் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் முதுநிலை படிக்க செல்பவர்களின் எண்ணிக்கை என குறிப்பிடத்தகுந்த அளவான மாணவர்கள் மட்டும் வேலைவாய்ப்பை எதிர்பார்க்காமல் இருக்கலாம். தகவல் தொழில்நுட்பத்துறை பொறியியல் பாடங்களில் முக்கியத்துவமான பாடமாக பார்க்கப்பட்டு 2002ம் ஆண்டு முதல் 2008 வரை பெரும் முன்னேற்றம் கண்ட துறையாக விளங்கியது தகவல் தொழில்நுட்பத்துறையாகும். 2008க்குப் பிறகு படிப்படியாக குறைய ஆரம்பித்ததும், ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி வளாகத்தேர்வுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைந்ததும் ஆர்வத்துடன் படிக்க வந்த மாணவர்களிடையே கவலையை உண்டாக்கியுள்ளது. ஆனால், அதே நேரம் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதாக உறுதியளிக்கும் ஊதியத்தின் அளவும் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு அதிகமான ஊதியத்துடன் கிடைத்த வாய்ப்புகள் மற்ற கல்லூரி மாணவர்களிடையே ஏக்கத்தையும், வியப்பையும் உருவாக்கியுள்ளது. அதே போன்று சிறந்த தனியார் கல்லூரிகள், தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் நடக்கும் வளாகத்தேர்விலும் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் சிறப்பான ஊதியத்தை பெறுகின்றனர். மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், கூகுள், விப்ரோ, டி.சி.எஸ்., அக்செஞ்சர், கோக்னிசன்ட், இன்ஃபோசிஸ் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றன. இது சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், பிற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடுகிறது. இந்த நிலை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆட்தேர்வில் மாற்றம் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை கணக்கில் எடுத்தால் 3 ஆயிரத்தை கடந்து செல்லும். இதில் படிக்கும் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலை பெறுவது சந்தேகமே. தற்பொழுது நிறுவனங்களும் ஆள் எடுப்பில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றன. மாணவர்களை தேர்ந்தெடுத்து, பின்னர் அவர்களுக்கு பயிற்சியளித்து பணிக்கு அமர்த்துகின்றனர். பயிற்சிக்கு செலவழிக்கும் தொகை அதிகமாக இருப்பதால், பயிற்சி அளிப்பதை நிறுத்தி நேரடியாக பணிக்கு தயாராக இருப்பவர்களை மட்டும் தேர்ந்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையின் காரணமாக கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு பயிற்சியை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் நிலைப்பாட்டை கல்வியாளர்கள் குறை கூறுகின்றனர். ஏனெனில் வருடம்தோறும் புதிய புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து வருகிறது. பாதிப்பிற்கான காரணம் "இருக்கின்ற கல்வி நிறுவனங்கள் போதிய கட்டமைப்புகளோடு இல்லாத நிலையிலும், மாணவர்கள் வேலை பெறுவதற்கான திறன்களை மேம்படுத்த பல கல்வி நிறுவனங்கள் முயற்சி செய்யாத நிலையிலும், தேவைக்கு அதிகமாக கல்லூரிகள் உள்ள நிலையிலும் புதிய கல்லூரிகள் உருவாவது நாட்டின் எதிர்காலத்திற்கும் உகந்தது அல்ல" என்பதே கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஒரே துறை சார்ந்து அதிகமான கல்வி நிறுவனங்கள் உருவாவது பிற துறைகளின் வளர்ச்சியை பாதிப்பதோடு, சமூக வளர்ச்சியிலும் ஒரு சம நிலையை உருவாக்குவதில் மறைமுகமான தடைகளாக இவை இருக்கிறது. சரிவிகித வளர்ச்சி அவசியம் தமிழகத்தைப் பொறுத்த வரை 2005களில் 200களில் இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 2013ல் 550ஐ கடந்து சென்றுவிட்டது. இந்த அபரிவித வளர்ச்சிக்கு தகுந்த வகையில் கல்வி நிறுவனங்களை மேற்பார்வையிடுவதும், குறைகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசியமாக இருக்கிறது. ஏனெனில் தொழில் நிறுவனங்களைப் போன்றது அல்ல கல்வி நிறுவனம். படிக்கும் இளையோர்களின் எதிர்காலம் அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமாக இருக்கிறது. Thanks to : Dinamalar |
No comments:
Post a Comment